Posted: Fri,27 Apr 2018 11:12:47 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் நதி நீர் இணைப்பு சங்க தலைவர் அய்யா கண்ணு. இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையும் கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை உள்ளது. இந்த நிலை இருந்தால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்தால் ஆண்மை குறைவும், பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25 லட்சம் நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டிடங்கள் அதிகமாக கட்டப்பட்டு வருவதால், மலைகளின் அரசி என்ற பெயரை இழந்து விடும். எனவே, தேயிலை விவசாயத்தை பாதுகாத்து, மலைகளின் அரசி என்ற பெயரையும் பாதுகாக்க வேண்டும். கூடலூர் தேவாலா பகுதியில் ஆண்டுக்கு 4 ஆயிரம் மில்லி மீட்டர் முதல் 7 ஆயிரம் மில்லி மீட்டர் வரை மழை பதிவாகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது சிரபுஞ்சி என்று தேவாலா அழைக்கப்படுகிறது. அதிகமாக பெய்யும் மழைநீர் வீணாக ஓடி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை முழுமையாக திருப்பி தேவாலா பகுதியில் மேற்கு மண்டலமான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேவாலா பகுதியில் அணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேற்கு மண்டலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற நிலையே வராது. தேவாலா பகுதியில் அணை கட்டுவது குறித்து வருகிற ஜூன் 9-ந் தேதிக்குள் தமிழக அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்றால், சென்னை மெரினா கடற்கரையில் ஜூன் 10-ந் தேதி முதல் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை புதிய செயல்வடிவத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஆனைமலை ஆறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால் மேற்கு மண்டலத்தில் 10 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். கர்நாடக தேர்தலுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சியாக வெடிக்கும்” என்று தெரிவித்தார்.
  • 0 Comment(s)
Be the first person to like this