என் அப்பா ஒரு சக்தி வாய்ந்த தலைவர்: ஸ்ருதிஹாசன் பேச்சு
Posted: Thu,26 Apr 2018 10:41:10 GMT
கமல் என்றால் சினிமா, சினிமா என்றால் கமல் என்ற தமிழர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. சினிமாவை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று சொல்லி வந்த கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். மாதிரி கிராமசபை உள்ளிட்ட பல முற்போக்கான திட்டங்களை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் அரசியல் குறித்து தெரிவித்திருக்கும் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன், “கமல்ஹாசனை நடிகராகவும், அப்பாவாகவும் நான் காண்கிறேன். அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி நுழையமாட்டார். அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை. யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் கதை கேள் என்றும் சொன்னதில்லை. எங்கள் திறமைகளை அங்கீகரிக்கும் சிறந்த தந்தை அவர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இசைஅமைப்பாளராக முதல் அடி எடுத்துவைத்தபோது, உருவாக்கிய முதல் பாடலைப் பாடும் தைரியத்தை அவர்தான் தந்தார். அவர் சுவாசிப்பதுகூட சினிமாவைத்தான் என்று சொல்லலாம். இந்த வயதிலும் அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போகிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னை சிலிர்க்கவைக்கிறது.
எங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரத்தையும் அப்பா எங்களுக்கு தந்திருக்கிறார். அதனால் அவர் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் அது எங்களுக்கும் சம்மதம்தான். வாழ்க்கையில் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நல்லதற்காகத்தான் இருக்கும். அவர் அரசியலில் இறங்கியதையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவரது உண்மை, நீதி, அர்ப்பணிப்பு போன்றவை எல்லாம் இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக மட்டும் இருந்தது. இனி அது தமிழக மக்களுக்கும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)