வெற்றிவேல் குற்றச்சாட்டுக்கு ஜெயானந்த் பதில்
Posted: Wed,25 Apr 2018 06:12:28 GMT
டிடிவி தினகரனை விமர்சித்து அரும் திவாகரன் மற்றும் அவர் மகன் ஜெயானந்த் ஆகியோர் எடப்பாடியுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாக தினகரன் ஆதரவாளார் வெற்றி வேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெற்றி வேலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், திவாகரன் மகன் ஜெயானந்த், தான் நடத்திவரும் போஸ் மக்கள் பணியகம் அமைப்பின் லெட்டர் பேடில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “எங்களைப் பற்றி தாங்கள் பதிவிட்டிருப்பது எங்களை கோபப்படுத்தவில்லை. ஆனால் மிகுந்த மனவருத்தத்தை அளித்திருக்கிறது. கட்சியின் முக்கிய மனிதர் நீங்கள் எங்கள் நிலை உணராமல் இருப்பது எனக்கு வருத்தமே. நாங்கள் எடப்பாடி அணியோடு மறைமுகமாக நெருக்கமாக இருக்கிறோம் என்று நீங்கள் கூறியது தவறு. எங்கள் குடும்பத்தை சேர்ந்த உறவினரை கரூரில் இருந்து வேலூருக்கு மாற்றி பழிவாங்கும் நடவடிக்கை எடுக்திருக்கிறார் எடப்பாடி, எங்கள் குடும்ப உறவினர் என்பதால் தான் இந்த நடவடிக்கை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இது போல பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.
நாங்கள் அரசியலில் உங்களுடன் பயணித்தால் தானே பாஜக எங்களை பணிய வைக்க. கடந்த 8 மாத காலமாக வருமான வரித்துறை மூலம் எங்கள் குடும்பத்திற்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் மிகுந்த இன்னல்களையும் இம்சைகளையும் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத்தெரியாதா? 72 மணி நேரம் என் வீட்டில் தங்கி என்னை அடிக்க வருவது போல பாவனைகள் செய்து தவறான வாக்குமூலம் வாங்க நினைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? என் நண்பர்களில் ஏராளமானோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு நேர்மையான பதிலும் வரவில்லை. ஆகையால் அவர்கள் தொழிலில் முடங்கி வாழ்வதற்கு போராடும் அவலம் நீங்கள் அறிவீர்களா? நாங்கள் பலவற்றை சொல்லிக்காட்ட விரும்பவில்லை. தியாகம் என்பது அனைவரிடத்திலும் உள்ளது, அதை நாங்கள் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. நாங்கள் உங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை. நாங்கள் உங்களிடம் எந்தவித பதவியும் எதிர்பார்க்கவில்லை. நானும் திவாகரனும் அனைத்து பொதுமேடைகளிலும் டிடிவி தான் முதல்வர் என்று இன்று வரை கூறி வருகிறோம். நாங்கள் இதுவரை பொதுமேடைகளில் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் ஒரு சில விஷயங்களில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு மனிதன் சக மனிதனுக்கு கொடுக்கும் மரியாதை மட்டுமே.
பல மாதங்களாக மறைமுகமாக திரைமறைவில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறோம். அதைப்பற்றி கூற விரும்பவில்லை. எதற்கும் ஆசைப்படாத எங்களுக்கு கையில் தாங்கிக் கொள்ள அளவிற்கு மரியாதை கொடுத்துள்ளீர்கள். ஆனால் ஒன்று மட்டும் நான் நான்கு அறிவேன், யாரோ எழுதிய அறிக்கை உங்கள் பெயர் போட்டு வெளிவந்திருக்கிறது. உங்கள் மனசாட்சிக்கு அது தெரியும் என நம்புகிறேன். திவாகரனின் தற்போதைய நிலையை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு குட்டி கதை மட்டும் சொல்கிறேன். பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று சொன்னதற்காக விஞ்ஞானி கலிலீயோவை கல்லால் அடித்துக்கொன்றனர். ஆனால் அவர் இறந்த பின்னர் கலிலீயோ சொன்னது உண்மை என்று விஞ்ஞான பூர்வமான நிரூபனமானது, அவர் இருக்கும்போது சொன்ன உண்மை இறந்த பின்பு உலகம் அறிந்தது. ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், நாங்கள் உண்ணும் இலையில் மலத்தை அள்ளி வைத்தால் கூட அமைதி காப்போம் "சின்னம்மா" என்ற ஒற்றை வார்த்தைக்காக” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.