
விஜயகாந்த்தின் திரைப்பயணத்தின் நாற்பதாவது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழ் திரையுலகின் முக்கிய நபர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், விஜய்யின் அப்பா சந்திரசேகர் கலந்து கொண்டு, விஜய்யின் திரைப்பயண வெற்றிக்கு விஜயகாந்த்தான் காரணம் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “என் மகன் விஜய் நடிகனாக ஆசைப்பட்டதும், நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் அவரால் நல்ல நடிகராக முடியும் என்று நினைத்தேன். விஜயகாந்துக்கு போன் செய்து அவரைச் சந்திக்க வேண்டும் என்றேன். ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் என் வீட்டிற்கு வந்துவிட்டார்.
விஜய்யைப் பற்றி சொன்னதும், எப்போது ஆரம்பிக்கிறோம் என்று உடனே சம்மதம் சொன்னார். அவருடைய சம்பளம் பற்றி கேட்டதும், முதலில் ஷுட்டிங்கை ஆரம்பியுங்கள், விஜய் நல்ல நடிகராக வரட்டும் பின்னர் பேசுவோம் என்றார். செந்தூரபாண்டி படம் எடுத்து முடித்தோம், பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மிகப் பெரிய இடத்தில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.