Posted: Mon,16 Apr 2018 01:03:24 GMT
விஎச்பி இயக்கத்தின் முன்னாள் தலைவரும், சர்ச்சைகளால் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றவருமான பிரவீன் டொகாடியா, விஎச்பி அமைப்பில் இருந்து விலகியுள்ளார்
சமீபத்தில் நடைபெற்ற விஎச்பி அமைப்பின் சர்வதேச தலைவர் பதவிக்கான தேர்தலில், தனது ஆதரவாளரான ராகவ் ரெட்டியை நிறுத்தி இருந்தார் பிரவீன் டொகாடியா. அவரை எதிர்த்து இமாச்சலப்பிரதேச முன்னாள் ஆளுநரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.எஸ்.கோக்ஜே போட்டியிட்டார்.
192 உறுப்பினர்கள் வாக்களித்ததில் இத்தேர்தலில், 131வாக்குகள் பெற்று கே.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார். டொகாடியாவின் ஆதாவாளாரன ராகவ் ரெட்டி 61 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து, தானும், தனது ஆதரவாளர்களும் விஎச்பி அமைப்பில் இருந்து விலகுவதாக பிரவீண் டொகடியா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொகாடியா, “விஎச்பி சர்வதேச தலைவர் பதவிக்கான தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்காளர் பட்டியல் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை மிகப்பெரிய அளவில் கட்டமைத்த பெருமை எனக்கு இருக்கிறது. ஆனால் அந்த அமைப்பு இப்படி வளைந்து கொடுத்து செல்வதை நினைக்கும் போது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்துக்களின் நலனுக்காக இல்லாமல், தனிநபர்களின் பதவிக்காகவும், அதிகாரப் பசிக்காவும் செயல்படுகிறது.
தியாக மனப்பான்மை என்ற கொள்கையுடன் விஎச்பி உருவாக்கப்பட்டது. ஆனால், விஎச்பி அமைப்பு இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. அந்த அசிங்கமான அரசியலும், அதன் செயல்பாடுகளும், விஎச்பியின் அமைப்பையும், அதன் சித்தாந்தங்களையும் சிதைத்துவிட்டதை இந்துக்கள் கண்கூடாகப்பார்த்து வருகிறார்கள். இதனால், இந்துக்கள் வரும் காலத்தில் பாதுகாப்பு அற்றவர்களாக மாறக்கூடும். அதிகாரப் பசி கொண்டவர்கள் இடமாக விஎச்பி மாறும்.
அனைத்து இந்துக்களும், விஎச்பி ஆதரவாளர்களும் அமைதி காத்து, இந்துக்களின் பாதுகாப்பு, வளம், வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சட்டம் இயற்ற வேண்டும், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 370 மற்றும் 35ஏ சட்டத்தை நீக்க வேண்டும், பசுக் கொலையை தடுக்க வேண்டும், வங்கதேசத்தில் இருந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பி அனுப்பவேண்டும், விவசாயிகளின் கடனைத் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி நான் வரும 17-ம் தேதி ஆமதாபாத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this