Posted: Sat,14 Apr 2018 12:19:35 GMT
கோடையை மகிழ்ச்சியாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நல்ல மழைக்கு வாய்ப்பு வந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசி இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், “குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் , விளாத்திக்குளத்தில் 11 செ.மீட்டர் மழையும், சிவகங்கையில் 10 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும் வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் , நெல்லை, குமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும். மாலத்ததீவு , லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் 15 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this