”ஆளத் தகுதியில்லாத அரசு”, த.மா.கா குற்றச்சாட்டு
Posted: Sat,14 Apr 2018 11:24:47 GMT
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக அரசுக்குச் சொந்தமான பூங்காவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணித்தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். போராடத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜா, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது.
இது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றிக்காக, ஒரு மாநிலத்தின் உரிமையை மத்தியில் உள்ள மோடி அரசு அடமானம் வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவில்லை. அதே வேளையில் தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசும் மத்திய அரசிடம் மண்டியிட்டு, குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் கர்நாடக அரசு பூங்கா அமைக்க அனுமதியளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த இடத்தைத் தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக பூங்கா எனும் பெயரை மாற்றி தமிழக அரசு வேறு பெயரைச் சூட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை இந்தப் பூங்காவை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்திதான் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளோம். ஒருவேளை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தினால், நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்களைத் திரட்டி, தமிழக கர்நாடக எல்லைகள் அனைத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்களுக்கு எந்த ஓர் இடையூறும் செய்வதோ அவர்களின் உடைமைகளைச் சேதப்படுத்துவதோ தமாகாவின் நோக்கம் கிடையாது. ஜனநாயக முறையில் எங்களது போராட்டம் தொடரும். வாட்டாள் நாகராஜ் போன்றவர்களைக் கர்நாடகாவில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். இவர் போன்றவர்களால்தான் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. டோல்கேட் கட்டணத்தை மத்திய அரசு 20 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. இதற்குகூட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆளத் தகுதியில்லாத அரசாக உள்ளது” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)