2019க்குப்பிறகு இந்தியா வளர்ச்சி பெறும்: ரகுராம் ராஜன் கணிப்பு
Posted: Fri,23 Mar 2018 02:30:04 GMT
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக பணியாற்றிய ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் 2019ம் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்திருக்கும் அவர், “2019 தேர்தல் வரை வங்கித்துறையில் புதிதாக வேறு எந்தச் சீர்திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ளாது. தற்போது இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பானது 7.5-ல் உள்ளது. அடுத்த வருடம் வரை இது இந்த நிலையிலேயேதான் இருக்கும். அதன் பின்னர் மெள்ள மேல் நோக்கி நகரக்கூடும். ஆண்டுக்குத் தொழிலாளர்களாக 1 கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலைதேடி வெளியே வருகிறார்கள். ஆனால், 7.5 சதவிகித வளர்ச்சியால் அவர்கள் அனைவருக்கும் வேலைப் பெற்றுத்தர முடியாது. 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்குப்பிறகு, தற்போது நாட்டில் நடைபெற்றுள்ள வரிச்சீரமைப்பிற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்
மேலும், “2019-க்குப் பிறகு 10 சதவிகித வளர்ச்சி என்பதுகூட சாத்தியம்தான். ஆனால், அதற்கான வேலைவாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் போனால் வளர்ச்சி இருக்காது. இந்தியா தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் வங்கித்துறையில் எந்தவகையான புதியச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது. எல்லா புதிய மாற்றங்களையும் மூட்டைகட்டி வைத்துவிடுவார்கள். தேர்தலை நோக்கிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மட்டுமேயிருக்கும். தேர்தல் முடிந்தபிறகுதான் வங்கித்துறையில் மாற்றங்கள் நிகழும். வளர்ச்சியும் இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
  • 0 comment(s)
Be the first person to like this.