தமிழகத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சர் விளக்கம்
Posted: Tue,20 Mar 2018 10:59:21 GMT
தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துவிட்டது என்ற திமுக உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “மொத்த கடனில், மூலதனத்திற்கு குறைவாக செலவிட்டிருப்பதாக கூறுவது தவறு. மத்திய அரசும், மாநில அரசும், ஆண்டுதோறும் கடன் பெறுவதும், பெற்ற கடனை, அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதும் வழக்கம். கடந்த, 2015 - 16 இறுதியில், தமிழக அரசின் மொத்த கடன், 2.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த, 2016 - 17 இறுதியில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கடன், 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, அரசு ஏற்றதால், மொத்த நிலுவை கடன் அளவு, 2.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த, 2017 - 18ல், திருத்த மதிப்பீடுகளின்படி, நிதியாண்டு இறுதியில், நிலுவைக் கடன், 3.12 லட்சம் கோடி ரூபாயாகவும், 2018 - 19ல், 3.56 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
பொதுக்கடனை, ரூபாய் மதிப்பில் பார்ப்பது சரியன்று. மாநிலத்தின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி மதிப்பில், கடனின் விகிதாச்சார அளவே, கடன் அளவை குறிப்பிடும் அளவுகோல்.
மத்திய நிதிக்குழுவை பொறுத்தவரை, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்திற்குள், கடன் இருக்க வேண்டும். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, ஆந்திராவில், 24.09; மத்திய பிரதேசத்தில், 26.34; கேரளாவில், 30.70; உத்தர பிரதேசத்தில், 29.78; மேற்கு வங்கத்தில், 37.63; தமிழகத்தில், 22.29 சதவீதமாக கடன் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
ஊதிய திருத்தங்களால், சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்காக ஒதுக்கப்பட்ட, பெருமளவு தொகையால், கடன் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது. இந்த செலவினங்களை சமாளிக்க, வருவாய் வரவினங்களில் உயர்வு இல்லை. மதுபான கடைகளால் கிடைக்கும் வணிக வரிகளிலும், ஆயத்தீர்வை வளர்ச்சி விகிதங்களிலும், கணிக்கப்பட்ட அளவிற்கு வருவாய் இல்லாததாலும், கடன் சுமை அதிகரித்துள்ளது. பொருளாதார சூழ்நிலையில், நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதால், கடன் அளவு எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. தற்போது நிதி பற்றாக்குறையும், கடன் அளவும், கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)