Posted: Mon,05 Mar 2018 04:28:00 GMT
பங்குச்சந்தையில் முதலீடு செய்து உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் வாரன் பஃபெட். பங்கு சந்தையில் அதிகம் சம்பாதிக்க முதலீட்டாளர்களுக்கு சில அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில், “எல்லோரும் விற்கும்போது வாங்க வேண்டும், எல்லோரும் வாங்கும்போது நாம் விற்கவேண்டும். இந்த சூட்சமத்தை தெரிந்து வைத்துக்கொண்டால் பங்குச் சந்தையை நம் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்ட மாதிரியாகும். இல்லை என்றால் நம் கையைச் சுட்டுகொள்ளவேண்டியது இருக்கும். திறமை, போட்டி போடக்கூடிய பலம் மற்றும் உயர்தர மேலாண்மை, தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிலைத்த சொத்துக்கள், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வாய்ப்புள்ள நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து அவை விலை மலிவாக கிடைப்பதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வாங்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க நினைக்கும்போது, அதனை நாம் வெறும் நிறுவனத்தின் அடையாளமாகவோ அல்லது குறியீடாகவோ மட்டும் பார்க்கும் கண்ணோட்டத்தை தவிர்த்து விட்டு, அதனை நீண்டகால முதலீடாவே கவனத்தில் கொள்ளவேண்டும். தினசரி வர்த்தகப் பொருளாகவோ அல்லது தினசரி வாங்கி விற்கும் பங்காகவோ நினைக்கும் போக்கை தவிர்க்கவேண்டும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யும் மற்றொரு தவறு, கடன் வாங்கியோ, அல்லது நகைகளையோ அடமானம் வைத்தோ அந்தப் பணத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய அம்சமாகும். நம்மிடம் உள்ள உபரி வருமானத்திலோ, மாத வருமானத்தில் ஒரு பகுதியையோ முதலீடு செய்யவேண்டும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்களின் போக்கை நினைத்தபோதெல்லாம் இஷ்டத்திற்கு மாற்றி மாற்றி வாங்கி விற்கும் போக்கை கைவிடவேண்டும். அப்படி செய்தால் நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. கூடவே பரிவர்த்தனைக் கட்டணமும் அதிகமாக இருக்கும். கடைசியில் நாம் வாங்கி விற்றதில் கிடைத்த லாபத்தைக் காட்டிலும் அதற்கு தண்டமாக செலுத்திய பரிவர்த்தனைக் கட்டணம் அதிகமாக இருக்கும்.
இறுதியாக, நாம் செய்யும் முதலீடு என்பது, நாம் ஒரு சிறு மாமரச் செடியை நட்டு வைத்து ஏழு முதல் எட்டு வருடம் வரையில் பாதுகாத்து காத்திருந்து பழத்தை பறித்து சுவைப்பதைப் போல இருக்கவேண்டுமே தவிர நினைத்தபோதெல்லாம் உண்டியலை உடைத்து பணத்தை செலவழிப்பது போல இருக்கக் கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this