”வாய்ப்புகள் அமைவதில்லை”, மணீஷ் பாண்டே வருத்தம்
Posted: Thu,22 Feb 2018 04:39:13 GMT
சிறப்பாக ஆடிவரும் தனக்கு வாய்ப்புகள் அமைவதில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நேர்மையாகக் கூற வேண்டுமெனில் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பது கடினமாக உள்ளது. இது நம் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் மனச்சஞ்சலம் அதிகம் இருந்தது.
ஆனால் இதுதான் கிரிக்கெட் என்பதும் அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது நம் வாய்ப்புக்காக நாம் காத்திருந்து அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது.
4-ம் நிலையில் சில வாய்ப்புகள் கிடைத்தது, நான் நன்றாகச் செயல்பட்டேன், பேட்டிங் சேர்க்கை சில வேளைகளில் என்னை 5-ம் நிலைக்கு இறங்க பணிக்கிறது. இன்னும் சிறப்பாக ஆட வேண்டும், எனக்காக ஆட வேண்டும் என்று நினைக்கிறேன்.
அணியில் சிறப்பான டாப் ஆர்டர் உள்ளன, இவர்கள் 30-35 ஓவர்களை ஆடிவிடுகின்றனர், விராட் கோலி, தோனி எனக்கு முன்னால் இறங்க வேண்டியுள்ளது. எனவே இன்னும் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும்.
இந்திய அணியில் 5-ம் நிலையில் ஆடுவது கடினம், இதற்கு முன்பு ரெய்னா, யுவராஜ் ஆடினர், அவர்கள் இடத்தை நிரப்புவது கடினம். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் சிறப்பாக ஆடிவருகிறது. எனவே வாய்ப்புகளுக்காக பொறுமையுடன் காத்திருப்பது அவசியம்.
முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும், இதைத்தான் முதல் போட்டியில் செய்ய நினைத்தேன், ஆனால் கொஞ்சம் மந்தமான இன்னிங்ஸாகி விட்டது அது. எப்போதும் நான் விளையாடும் பாணியிலேயே தொடர விரும்புகிறேன்.
நேற்று தோனி என்னை தட்டி எழுப்பினார். பின் களத்தில் அவர் சிறந்த வீரர், 2 ஓவர்களை அவர் ஆதிக்கம் செலுத்தினார். முதலில் 170 ரன்கள் இலக்கு போதுமானது என்றே நினைத்தோம், ஆனால் நானும் தோனியும் ஜோடி சேர்ந்த போது இரண்டு உள்விளிம்பில் பட்டு பவுண்டரிகள் சென்றது, பிறகு தோனி இரண்டு கிரேட் ஷாட்களை ஆடினார். 188 ரன்களுக்குக் கொண்டு சென்றோம்.
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்காக ஆடும் போது கிளாசனை நான் பார்த்திருக்கிறேன், நமக்கு எதிராக சதம் எடுத்தார், அவர் எப்போதும் இப்படித்தான் ஆடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)