Posted: Wed,14 Feb 2018 05:45:22 GMT
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மகளிர் அணித்தலைவி பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று தெரிவித்தார்.
இது குறித்து கூறிய அவர், “ஜெயலலிதா உருவப்படம் திறப்பு குறித்து, ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஏன் திறக்கக்கூடாது என, விஜயகாந்த் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது உருவப்படத்தை, அ.தி.மு.க., தலைமை அலுவலகம், மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் திறக்கலாம்; சட்டசபையில் திறந்ததை ஏற்க முடியாது.” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில், எல்லா துறைகளும் நலிந்து விட்டன; அவற்றை முன்னேற்ற, எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. எதிர்காலத்தில், அரசு எப்படி செயல்பட போகிறது என்பதை, பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். எங்களுக்கு பிடித்த கருத்துக்களை தெரிவித்தால் உடனே, பா.ஜ., கட்சிக்கு ஆதரவு என்கின்றனர்.
பல கோடி பணம் கொடுத்து, மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. 'நீட்' தேர்வு வந்தால், சாமானியர்களின் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க முடியும். தேர்வுகள் முறைகேடு இன்றி நடக்க வேண்டும். தேர்தல் வந்தால், யாருடன் கூட்டணி என்பதை, விஜய காந்த் முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this