Posted: Wed,14 Feb 2018 05:41:31 GMT
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் ராகுல் காந்தி, நேற்று கலபுரகி நகரில் பேசும் போது, மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, எளிமையாக்கப்படும். இந்த வரியால், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு காணப்படும். எல்லா பொருட்களுக்கும், ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல் செய்யப்படும்.
ஏழைகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், வரி வளையத்திலிருந்து அகற்ற, காங்., திட்டமிட்டிருந்தது. ஜி.எஸ்.டி.,யில் அதிக பட்ச வரி, 18 சதவீதம் என நிர்ணயிக்க முடிவு செய்துஇருந்தோம். ஐந்து அடுக்கு உடையதாக, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டாம் என, துவக்கத்திலிருந்து, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தும் முன், பரீட்சார்த்த அடிப்படையில் சோதித்து பார்க்கும்படி கூறிவந்தோம். ஜி.எஸ்.டி., அமல்படுத்தும் முன், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் சந்தித்து, ஐந்தடுக்கு, ஜி.எஸ்.டி., வேண்டாம் என,வலியுறுத்தினார். ஆனால் அதை, அவர்கள் ஏற்கவில்லை.
இந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்; எனவே, இதில் மாற்றம் செய்ய முடியாது; குறிப்பிட்ட நாளில், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படும் என, அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அப்போதும், 'ஜி.எஸ்.டி., இணையதளம் சோதிக்கப்படவில்லை. எனவே, மூன்று மாதங்களாவது, பரீட்சார்த்த முறையில், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தை ஆராய வேண்டும்' என, ஜெட்லியிடம் வலியுறுத்தி கூறினோம்.பல முறை வலியுறுத்தியும், தங்கள் நிலைப்பாட்டில், மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதன் பலனைத் தான், தற்போது நாம் பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this