Posted: Sat,03 Feb 2018 01:09:28 GMT
மத்திய நிதிநிலை அறிக்கையில் 10 கோடி ஏழை எளிய மக்கள் பலன் பெறும் வைகையில் தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் என்ற காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி எவ்வாறு கிடைக்கும் என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பட்ஜெட்டில் அறிவித்தபடி, தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம், 2018 - 19ம் நிதியாண்டில் அமல்படுத்தப்படும். இது, ஒரு ரொக்கமில்லா மருத்துவக் காப்பீட்டு திட்டம். சிகிச்சைக்கான பணத்தை திருப்பி செலுத்தும்படி கோர முடியாது.
இத்திட்டத்தில், அதிகமான மக்கள் சேரும் போது, காப்பீட்டுக்கான பிரீமியம் குறையும். இத்திட்டத்தில், அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக ஈடுபடுத்தப்படும். அரசு மருத்துவமனைகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளும், இதில் ஈடுபடுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, 'நிடி ஆயோக்' மற்றும் சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்துகின்றன.
தற்போதைக்கு, இத்திட்டத்திற்கு, 2,000 கோடி ரூபாய் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. திட்டம் செயல்பட துவங்கியதும், தேவைப்படும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்திற்கு, நிதி ஒரு பிரச்னையே இல்லை. வரி வருவாய் அதிகரித்து வருவதால், அடுத்தடுத்த ஆண்டுகளிலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு, நிதி ஒரு பிரச்னையாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this