Posted: Sat,20 Jan 2018 12:54:19 GMT
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம், 20 ஆயிரத்து, 488 கோடி ரூபாய். போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கவும், அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. புறநகர் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், ஐந்து ரூபாயிலிருந்து, ஆறு ரூபாய்; நகர் மற்றும் மாநகர பஸ்களில், மூன்று ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 19 ரூபாயாகவும், சென்னையில், குறைந்த பட்ச கட்டணம், மூன்று ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 14 ரூபாயில் இருந்து, 23 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.வால்வோ பஸ்களில், ஒன்று முதல், 38 நிலை வரை, குறைந்தபட்ச கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 25 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 'அண்டை மாநிலங்களை விட, குறைவாகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பஸ் கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும். இந்த கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.எதிர்காலங்களில், எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகள் குழு, பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this