”பாஜக செயலில் ஒன்றும் இல்லை”, கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
Posted: Sat,13 Jan 2018 04:56:09 GMT
சத்ரபதி சிவாஜியின் அன்னை ஜீஜாபாய் அவர்களின் பிறந்தநாள் விழா, மகாராஷ்ட்ராவில் உள்ளா புல்தானா மாவட்டம் சிந்த்கேட்ராஜாவில் நடைபெற்றது. அவ்விழாவில் டெல்லி பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு ஜீஜாபாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்
அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஒட்டுமொத்த உள்ளார்ந்த சமூகத்தை அடைய வேண்டும் என்ற இலக்கில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பாடுபட்டார். பீமா கோரேகாவில் தலித் மக்கள் மீது பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்திய தாக்குதல் காரணமாக சாதி மோதல் ஏற்பட்டது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சாதி, சமயம் மற்றும் ஆட்சியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டுவதே பா.ஜனதாவின் பேராசை. அரசு செலவில் தனியார் பள்ளிக்கூடங்கள் செழித்து வளர அரசு அனுமதி அளிக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களை நிர்வகிக்க இயலாத அரசு, ஆட்சியில் இருப்பதற்கு உரிமை இல்லை. சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா புலே, சாவித்திரி பாய் புலேயின் கனவை மராட்டிய பா.ஜனதா அரசு நசுக்கிவிட்டது.
நான் டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில், ஏழை பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். 3 ஆண்டுகளில், நவீன வசதிகளுடன் 300 புதிய பள்ளிக்கூடங்களை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
டெல்லி அரசின் பட்ஜெட் ரூ.40 ஆயிரம் கோடி தான். இருந்தாலும், பள்ளிக்கூடங்களை சீரமைக்கவும், புதிய பள்ளிக்கூடங்கள் கட்டவும் எங்களால் முடிகிறது. மராட்டிய அரசின் பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடி. ஆனாலும், அரசு பள்ளிக்கூடங்கள் இங்கு மூடப்பட்டு வருகின்றன.
முன்பெல்லாம் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்பட்ட டெல்லியில் இன்றைக்கு மின்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வகையில், சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த கோரி, விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த வேண்டும்.
டெல்லியில் பருவம்தவறிய கனமழையால், பயிர் நாசத்தை சந்தித்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நாங்கள் இழப்பீடு வழங்கினோம். ” என்று பேசினார்.
  • Share
  • 0 Comment(s)