Posted: Thu,04 Jan 2018 05:26:52 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் போக்குவரத்து முடங்கி பயணிகள் கடும் அவஸ்தைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் பேசிய செளந்தரராஜன், “பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போது அழைத்தாலும் செல்ல தயார். அரசின் அணுகுமுறையை எதிர்கொள்ள, வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி தெரியவில்லை.
ஓய்வுபெற்றவர்களுக்கான நிலுவைத் தொகை ரூ.2,000 கோடியை பெற 2 வருடம் காத்திருக்க வேண்டும். வேலைநிறுத்தத்திற்கு அரசுதான் காரணம். நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.
அரசே கஷ்டத்தையே தாங்க முடியாது என்றால் தொழிலாளி எப்படி கஷ்டத்தை தாங்கிக்கொள்வார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டது.
போக்குவரத்துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு நாங்கள் காரணமா என்று கேட்டோம். நீதிமன்றத்தில் முறையிடப்பட்டால் அங்கு எங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்போம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க மறுப்பது ஏன்? 2.44 காரணி ஊதிய உயர்வை எந்த காலத்திலும் நாங்கள் ஏற்க மாட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this