வாக்கு சீட்டு பயன்படுத்தப்படமாட்டாது
Posted: Wed,06 Dec 2017 12:58:16 GMT
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் 72 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படமாட்டாது எனவும், வாக்கு சீட்டு பயன்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியானது.
ஆனால் இதை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மறுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால், எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் வசதியுள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். அதற்கு மேல், வேட்பாளர்கள் போட்டியிட்டால், அத்தகைய வி.வி.பி.எ.டி., இயந்திரம் பயன்படுத்தப்படாது. அதே நேரத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், ஓட்டுப்பதிவு இயந்திரம் தான் பயன்படுத்தப்படும்; ஓட்டுச் சீட்டு கிடையாது.
தற்போது, 384 வேட்பாளர்கள் வரை இடம்பெறக்கூடிய, எம் - 3 ஓட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் தேர்தலில், 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால், அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அங்கீகாரம் பெற்ற, தேசிய கட்சி வேட்பாளர்களின் பெயர்கள், முதலில் அகர வரிசைப்படி இடம்பெறும். அதன்பின், அங்கீகாரம் பெற்ற மாநில கட்சி வேட்பாளர்கள் பெயர், அகர வரிசைப்படி இடம்பெறும்.
அதைத் தொடர்ந்து, பதிவு பெற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர், சுயேச்சை வேட்பாளர்கள் பெயர், அகர வரிசைப்படி இடம்பெறும். தேர்தல் பாதுகாப்பிற்கு, 15 கம்பெனி, துணை ராணுவ வீரர்கள், நாளை சென்னை வருகின்றனர். மூன்று தேர்தல் பொது பார்வையாளர்கள், மூன்று போலீஸ் பார்வையாளர்கள், சென்னை வந்து உள்ளனர். செலவின பார்வையாளர்களில், ஒருவர் இன்றும், மற்றவர்கள், நாளையும் வர உள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)