விஷால் பிரச்சினை அதிமுக வழக்கறிஞர் விளக்கம்
Posted: Wed,06 Dec 2017 12:56:21 GMT
விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின்னணியில் அதிமுக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ல அதிமுக வழக்கறிஞர் திருமாறன்,”நேற்று ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது அதிமுக சார்பில் நாங்கள் உள்ளே இருந்தோம். சுமார் 1.30 மணியளவில் விஷாலின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 2 சுயேச்சை வேட்பாளர்கள் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் 10 பேரின் கையெழுத்து போலியானது, அவர்களை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு அளித்தனர்.
அதிமுக சார்பில் நாங்களும் படிவம் 26ல் அவர் குறிப்பிடத் தவறிய சில விஷயங்கள் மற்றும் வங்கிக்கணக்கில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி எங்களுடைய ஆட்சேபணையை தெரிவித்தோம். தேர்தல் நடத்தும் அதிகாரி முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலி என்று சொல்லப்படுவது குறித்து விஷாலிடம் விளக்கம் கேட்டார்.
அதற்கு விஷால் கால அவகாசம் வேண்டும் 10 பேரையும் அழைத்து வருவதாக வழக்கறிஞர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மீண்டும் 3.30 மணியளவில் வேட்பு மனு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் அந்த வேட்பு மனுவில் கையெழுத்திட்ட இரண்டு நபர்கள் சுமதி, தீபன் இருவரையும் சுயேச்சை வேட்பாளர்கள் அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் சொன்னார்கள். விசாரணையில் அவர்கள் தாங்கள் படிவத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறிவிட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு நடந்த அனைத்து விஷயங்களும் வீடியோ ஆதாரங்களாக உள்ளன.
சுமதி, தீபன் வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டார் அதுவும் முழுக்க முழுக்க வீடியோ ஆதாரமாக பதிவாகியுள்ளது. 5.30 மணியோடு வேட்பு மனுநிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அனைத்தும் முடிந்துவிட்டது.
அதற்குப் பிறகு தான் விஷால் தன்னுடைய மனு ஏற்கப்பட்டதாகவும், பின்னர் நிராகரிக்கப்பட்டதாகவும் தவறான தகவலை ஊடகங்கள் மூலம் பதிவிட்டு வருகிறார். 7 மணியளவில் விஷால் ஒரு ஆடியோ ஆதாரத்தை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார், இது குறித்து பரிசீலிப்பதாக அவர் சொன்ன நிலையில் விஷால் பத்திரிக்கைகளிடம் மனு ஏற்கப்பட்டதாக தவறான தகவலை சொல்லியுள்ளார்.
மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அந்த மனுவை மீண்டும் பரிசீலிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைய விதிப்படி எந்த அதிகாரமும் கிடையாது. விஷால் சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது.
விஷால் வேட்பு மனுவில் உள்ள சட்ட ரீதியான தவறுகளை மட்டுமே நாங்கள் சுட்டிக் காட்டினோம். சுயேச்சை வேட்பாளர்கள் தான் முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் இருந்த குளறுபடிகளை சுட்டிக்காட்டினர். விஷால் மனு நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, யாரையும் அதிமுகவினர் மிரட்டவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)