கன்யாகுமரியில் ஸ்டாலின் ஆய்வு
Posted: Mon,04 Dec 2017 05:52:13 GMT
புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்யாகுமரியில் ஆய்வு செய்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ்., கருவிகளை வழங்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 2011 அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இதுப்பற்றி கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாயமான மீனவர்களின் கணக்கெடுப்பு முழுமையாக இல்லை; மீட்பு பணிகளும் சரியில்லை. அரசு சார்பில் நிதியுதவி அளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு சார்பில், 25 கோடி ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உயிரிழப்புக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் போதிய நிதி அளிக்கப்படவில்லை.
புயல் மழையால்,பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தேவை என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ரப்பர் மரங்கள், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. அதற்கான உற்பத்தி செலவை அரசு வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளை சரி செய்ய வேண்டும். மின் இணைப்பு 45 சதவீதம் தான் சரி செய்யப்பட்டுள்ளது. எனவே, பல இடங்களில் மின் தடை காணப்படுகிறது. நான்கு தொகுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டுள்ளேன். அரசு ஆடம்பர விழாக்களை தவிர்த்து முழுமையான நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)