பங்குச்சந்தையில் சரிவு ஏன்?
Posted: Mon,13 Nov 2017 02:44:59 GMT
இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பங்குச்சந்தை ஆலோசகர் எம். சேகர், அதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதில், “ சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதேசமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதன் பாதிப்பு பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
இந்தியாவை பொறுத்தவரை தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகித அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 4.5 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 3.8 ஆக சரிந்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மத்திய அரசு குறைந்துள்ளதால் மத்திய அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதன் தாக்கம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம் இருந்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கணிசமாக உயர்ந்து வந்ததால் லாபத்தை பதிவு செய்ய விரும்பிய முதலீட்டாளர்கள் பலர் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இந்த காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்று கணிசமான சரிவை சந்தித்தன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)