தமிழகத்துக்கு நன்மை செய்த தென்மேற்கு பருவமழை
Posted: Fri,13 Oct 2017 08:04:04 GMT
கடந்த ஆண்டும் கடும் வறட்சியை சந்தித்த தமிழகத்துக்கு, தென்மேற்கு பருவ மழை மூலம் நல்ல மழை கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்த போது தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவு கிடைக்காத நிலையில், தற்போது அதிக மழை கிடைத்துள்ளது.
தமிழக விவசாயிகளின் கண்ணீர் குரல் டெல்லி அரசியல்வாதிகளுக்கு கேட்காத நிலையில், இயற்கை அன்னைக்கு கேட்டதாலோ என்னவே இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான மழையை கொடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “• தென்மேற்கு பருவ மழை காலத்தில், வழக்கத்தை விட அதிகமாக, தமிழகத்தில், 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது
நாடு முழுவதும், 84.1 செ.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், 90; மத்திய மாநிலங்களில், 94; கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில், 96 சதவீதமும் மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களில், 100 சதவீதம் பெய்துள்ளது.
தென் மாநிலங்களில், இயல்பாக பெய்ய வேண்டிய, 71.6 செ.மீ.,க்கு பதில், 71.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, தமிழகம், புதுச்சேரியில், இயல்பான அளவான, 31.7 செ.மீ.,க்கு பதில், 41.4 செ.மீ., பெய்து உள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலத்தில், புயல் எதுவும் உருவாகவில்லை. ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆறு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் ஐந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Share
  • 0 Comment(s)