தோல்வி குறித்து கோஹ்லியின் கருத்து
Posted: Fri,29 Sep 2017 12:47:31 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 நாள் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி , நான்காவது போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணித்தலைவர் விரால் கோஹ்லி, “ஒரு அணி இன்னொரு அணியை விட நன்றாக ஆடும் என்பதற்கான பிட்ச் இது. முடிவில் ஆஸ்திரேலிய பவுலிங் நன்றாக அமைந்தது. சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்கள் உத்வேகத்தைக் கெடுத்தது. கேதார், பாண்டியா கூடுதலாக இன்னும் 50 ரன்களைச் சேர்த்திருந்தால் வேறு கதியாக மாறியிருக்கும். ஆனால் எப்போதும் சூழ்நிலைகள் நமக்குச் சாதகமாக இருக்காது.
எதிரணியினர் நம்மை விட சிறப்பாக ஆடிய ஒருநாளாக அமைந்தது, எனவே இதையே நினைத்துக் கொண்டிருக்காமல் இதிலிருந்து உடன்பாடான அம்சங்களை எடுத்துக் கொண்டு நகர வேண்டியதுதான். ஆனால் நாங்கள் நன்றாகவே ஆடினோம்.
பாண்டியாவை 4-ம் நிலையில் களமிறக்குவதற்குக் காரணம் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கவே. கடந்த போட்டியில் அதைச் செய்தா, அதையேதான் இன்றும் செய்தார். இவ்வாறு ஸ்பின்னர்களை அடிக்கும் போது எதிரணியினர் வேகப்பந்து வீச்சை விரைவில் முடிக்க வேண்டி வரும், இது முடிவில் நமக்கு சாதகப்பலனை அளிக்கும்.
மேலும் ஹர்திக் பாண்டியாவிடம் நல்ல தடுப்பாட்டமும் உள்ளது, உத்தி உள்ளது, வெறுமனே மட்டையைச் சுழற்றுபவர் அல்ல அவர். தன்னம்பிக்கை பெற்று விட்டால் இறுதி வரை ஆட்டத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதை தெரிந்து கொள்வார். இனி இவர் 4-ம் நிலையில் நீடிப்பார். எங்களை எளிதில் கணித்து விட முடியாது. எதிரணியினரை வெளியேற்ற வேறுபட்ட விஷயங்களைச் செய்வோம்.
கேதார் ஜாதவுக்கு பகுதி நேர வீச்சாளர் என்ற மனநிலை ஒத்துப் போகிறது, ரெகுலர் பவுலர்கள் ஒரு பந்து வீச்சாளர் பார்வையிலிருந்து அணுகுவார்கள், அதனால் அவர்கள் கொஞ்சம் கணக்கீட்டு முறையில் நடந்து கொள்வார்கள், ஆனால் பகுதி நேர வீச்சாளர் ஃப்ரீயாக வீசுவார், கால்குலேஷன் இருக்காது, மேலும் ஜாதவ் சிந்திக்கும் கிரிக்கெட் வீரர்.
விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளித்துதான் ஆகவேண்டும், உமேஷ், ஷமி நன்றாகவே வீசினர், அதனால்தான் ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்த முடிந்தது, இதனால்தான் நாம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம். மோசமாக ஒன்றும் ஆடவில்லை. ஆட்டம் முடிந்த பிறகு இதைச் செய்திருக்கலாம் அதைச்செய்திருக்கலாம் என்று நினைக்கும் கேப்டன் நான் அல்ல. ஆகவே புவனேஷ், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளித்தது பற்றி எந்த வித சந்தேகமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)