”இங்கிருந்து தூக்கி போட்டால் இமயமலையில் சென்று விழுவேன்”, ரஜினி காந்த் பேச்சு
Posted: Fri,19 May 2017 12:39:23 GMT
கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, இந்நிகழ்வின் முதல் நாளான மே 15அன்று அரசியல் குறித்து சில கருத்துகளை சொன்னார். அது இந்திய அளவில் விவாதத்துக்குறிய பொருளானது.
இந்நிலையில் நேற்று ரசிகர்களிடம் பேசிய ரஜினி, “அரசியல் குறித்து நான் பேசியது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. அதுவும், அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். எனவே வாத விவாதங்கள் எழுவது இயல்பே. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் மிகவும் கீழ்த்தரமாக எழுதுவது வருத்தமளிக்கிறது.
இந்த வேளையில் நான் ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தமிழனா என நிறைய பேர் கேள்வி எழுப்புகின்றனர். நான் வெறும் 23 ஆண்டுகள் மட்டும்தான் கர்நாடகாவில் இருந்திருக்கிறேன். 43 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் இருக்கிறேன். தமிழக மக்கள் என்னை ஆதரித்து, பெயரும், புகழும், பணமும் தந்து என்னைத் தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன். நீங்கள் என்னை இங்கிருந்து தூக்கிப்போட்டால் நான் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் சென்று விழமாட்டேன்.
தமிழக மக்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள். தமிழக மக்கள் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள். உங்களால் நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா?
அதற்குத்தான் வேறு சிலர் இருக்கிறார்கள் நீ என்ன சரிசெய்யப்போகிறாய் எனக் கேட்கலாம். இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். விஷயம் தெரிந்தவர். நவீனமாக சிந்திக்கக்கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி. அவரது கருத்துகளைக் கேட்டு நான் பிரமித்துப் போய் இருக்கிறேன்.
இத்தனை பேரும் இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் நிலவரம் சரியில்லை ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறதே. மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.
ஒரு செடி வளர்க்க வேண்டுமானால் அதை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி நன்கு அழுத்துவோம். அப்போதுதான் அந்த விதை வெளியே வரும். அதேபோல் நம் மீதான விமர்சனங்களும். அதுவரையிலும் நம்மைச் சுற்றிவரும் நிந்தனைகள், விமர்சனங்கள் எல்லாம் நம்மை வலுப்படுத்தும். விமர்சனம் செய்பவர்கள் அவர்களுக்குத் தெரியாமலையே நம்மை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் உங்கள் வேலைகளை கவனித்துவாங்கள். குடும்பத்தைக் கவனியுங்கள். எனக்கும் தொழில் இருக்கு உங்களுக்கும் தொழில் இருக்கு. போர்வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று பேசினார்.
  • Share
  • 0 Comment(s)