சங்கமித்ரா முதல் பார்வை வெளியீடு
Posted: Fri,19 May 2017 06:08:35 GMT
பிரான்ஸில் தொடங்கியுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சங்கமித்ரா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் சங்கமித்ரா. இப்படம் 300 கோடி செலவில் உருவாகவிருக்கிறது. இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியை பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்படவிழாவில் நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.
இந்த அறிமுக விழாவில் படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் படம் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டது அதில், “சங்கமித்ரா 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது.
தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது. தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம். இது கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும். சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டது
  • Share
  • 0 Comment(s)