காவிரி அரசியல்: பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
Posted: Thu,18 May 2017 05:43:06 GMT
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “காவிரியில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழகத்தின் விவசாயத்தைக் காக்க வேண்டும். தமிழகத்தின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு துரதிருஷ்டவசமாக பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சியான திமுக-வும் கைகோர்த்து செயல்படுவதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை.
தண்ணீர் கிடைக்காத போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து மழை பொய்த்தால் இதை விட மோசமான நிலை ஏற்படும். இதை மனதில் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எந்த பகுதிக்கு சென்றாலும் அப்பகுதியில் நிலவும் பிரச்சினைகளின் தனக்கு அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்வதில் வல்லவரான பொன் ராதாகிருஷ்ணன். தங்கள் பகுதியின் அடையாள சின்னமான ஒகேனக்கல் அருவி, கர்நாடகா தண்ணீர் தராததால் வறண்டு போனது குறித்த வருத்தத்தில் இருக்கும் தர்மபுரி மக்களிடையே இவ்வாறு பேசி தனக்கு காவிரி பிரச்சினையில் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொண்டுள்ளார். ஆனால் இவருடைய கட்சியை சேர்ந்த மற்றொரு அமைச்சரான உமாபாரதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்கும் விதமாக, ஒற்றை தீர்ப்பாய சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்பது இவருக்கும் தெரியாதா?
  • Share
  • 0 Comment(s)