ஆந்திராவால் தமிழகத்துக்கு பாதிப்பு
Posted: Thu,18 May 2017 09:27:22 GMT
ஆந்திராவில் அதிகரித்துள்ள கோடை வெப்பத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து வீசும் தரைக்காற்றால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, “ஆந்திராவில் தீவிர வெப்ப நிலை நிலவுகிறது. அங்கு இயல்பை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக பதிவாகிறது.
ஆந்திராவில் இருந்து வடமேற்கு திசை காற்று தமிழகத்தை நோக்கி வீசுகிறது. இதனால் தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்
மேலும் மழை வரத்து குறித்து கருத்து தெரிவித்த அவர், “தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 2 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)