வெறும் சுற்றுலா தளமான சுரங்க இரயில்
Posted: Thu,18 May 2017 09:26:33 GMT
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலும், சென்னை விமான நிலையம் முதல் சின்ன மலை வரையிலுமான உயர் மட்ட மெட்ரோ இரயில் சேவை மற்றும் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க ரயில் சேவை ஆகியவை நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க இரயில் சேவை சில நாட்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. சுரங்கத்தில் இரயில் செல்வதை பார்ப்பதற்காக மட்டுமே ஒரு சுற்றுலா மனநிலையில் இந்த இரயிலில் சாதாரண மக்கள் பயணிக்கிறார்கள். மற்றபடி தினசரி போக்குவரத்துக்கு இந்த சுரங்க இரயில் சேவையை பயன்படுத்தும் படியான கட்டணம் இல்லாமல் மிக அதிகமன கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதிக கட்டணம் குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இதுபோன்ற நவீன வசதிகளுடனும், பெரிய கட்டமைப்புகளுடனும் கூடிய திட்டத்தில் கட்டணம் சற்று அதிகம் என்பது இருக்கத்தான் செய்யும். உயர்த்தப்பட்ட பாதையை விட சுரங்கப்பாதை பயணிகளுக்கு சேவை அதிகம் அளிக்க வேண்டியுள்ளது.
அனைத்து தரப்பினரும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் கட்டண முறைகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக செலவிடப்பட்ட செலவினங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது” என்று தெவிக்கின்றனர்.
  • Share
  • 0 Comment(s)