போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்: வாசன் கோரிக்கை
Posted: Mon,15 May 2017 02:31:27 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் திடீரென வேலை நிறுத்தத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வேலை நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் நம்பிக்கையைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டியது உடனடி அவசியம். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இதுவரை அரசு மேற்கொண்ட 5 கட்டப்பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இது குறித்து அரசின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் போக்குவரத்து தொழிற்சங்கங்களில் 37 தொழிற்சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டன என்றும் சுமார் 10 தொழிற்சங்கங்கள் தான் இதனை ஏற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சில தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு இருக்காது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை புறக்கணிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இது ஒரு முழுமையான அமைச்சகத்திற்கு உள்ள செயல்பாடாக இருக்க முடியாது.
காரணம் ஒரு துறையின் அமைச்சர் அத்துறையின் தொழிலாளர்கள் சார்ந்த நிறை, குறைகளை எல்லோருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்பது தான் அவரது கடமையாக இருக்க முடியும். அந்த கடமை தவறி அரசும், அரசு சார்ந்த துறையும் செயல்படக் கூடாது.
பேருந்துகள் 100 சதவீதம் இயங்கினால் மட்டுமே பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. குறிப்பாக விடுமுறை காலம் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் வெளியூர்களுக்கு செல்வதும், வருவதும் அதிகம். அதே போல மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளுக்கு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றுவரக்கூடிய சூழல் தற்போது அதிகம். மிக முக்கியமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் தான் அதிக அளவில் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு முழுமையாக செவி சாய்க்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள 6 அயிரம் கோடி ரூபாயை ஒதுக்க முடியவில்லை என்றால் தற்போதைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் மிக முக்கிய கோரிக்கையாக வைக்கின்றனர்.
இத்தகையச் சூழலில் போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முக்கியப்பேச்சு வார்த்தைக்கு உடன்பட வேண்டுமே தவிர பேருந்துகளை பிற ஓய்வுபெற்ற தொழிலாளர்களை வைத்து இயக்குவது என்பது இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையாது. மேலும் இது தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சினைக்கு வழி வகுக்கும்.
எனவே போக்குவரத்து தொழிலாளர்கள் நலன், மாணவ, மாணவிகள் நலன் மற்றும் பொது மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி இது தொடர்பாக தமிழக முதல்வர் மனித நேயத்தோடு, நேரிடையாக அனைத்து தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளான ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)