படித்தவன் பாட்டை கெடுத்தான், ரிசர்வ் வங்கி ஆளுனர் நாட்டை கெடுத்தார்
Posted: Fri,07 Apr 2017 07:46:43 GMT
படித்தவன் பாட்டை கெடுத்தான் என்ற பழமொழி ஒன்று உண்டு. அதே போல், வெயில் கொளுத்தும் இந்தியாவில் கோட் சூட் போட்டுக்கொண்டு அலையும் படித்த மேதாவிகளுக்கு இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையே இன்னும் புரியவில்லை.
விவசாயகடன் தள்ளுபடி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல், “கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். இது கடன் கொடுக்கும் கலாச்சாரத்தை பாதிக்கும், மேலும் கடனை திருப்பி செலுத்துவதிலும் வாங்குவதிலும் ஒழுங்கற்ற தன்மைக்கு வழிவகுக்கும். விவசாயக் கடன் தள்ளுபடி நேர்மையாக கடனை திருப்பிச் செலுத்துவோரையும் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும். இது தீங்கான செயல். இந்த செயல் வரி செலுத்துவோர்களின் பணத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாய பொருளாதாரமே இந்தியாவின் முதுகெலும்பு என்பதை அறியாத, வெறும் ஏட்டு படிப்பை மட்டும் தலையில் ஏற்றிக்கொண்டு குளு குளு அறையில் இருக்கும் இவரை போன்ற அதிகாரிகள், மல்லையா போன்ற ஏமாற்று தொழிலதிபர்களின் ஆயிரக்கணக்காண கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் தன் ஒட்டு மொத்த வாழ்வையே அடமானம் வைத்து வெயிலிலும் மழையிலும் உழைக்கும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூச்சலிடுகிறார்கள். விவசாயிகள் எப்போதும் கடனை தள்ளுபடி செய் என்று கேட்பதில்லை. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலத்தில் மட்டுமே, கடன் தள்ளுபடி கேட்கிறார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.
  • Share
  • 0 Comment(s)