486 views


“திராவிடம்தான் தமிழ்தேசியத்தை நசுக்கியது நசுக்கிக் கொண்டிருக்கிறது எனவே திராவிடத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு தமிழர்களாக ஒன்றுபடுவோம்”- என்று நாம் தமிழர் இயக்கம் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு கருத்துப் புயலை வீச வைத்திருக்கிறது.


இந்நிலையில், பெரியார் தமிழர்களுக்கு எதிரியல்ல என்ற வகையில் பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட உதிரி பெரியாரிஸ்டுகள் சீமானுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.


ஆனால்... ‘பெரியார் பீடம்’ என்று அழைக்கப்படும் பெரியார் திடலில் இருந்து இதுவரை பெரியாரை  பாதுகாப்பு செய்து எந்த அறிக்கையும், பதிலும் வெளியிடப்படவில்லை. ஜூன் மாதம் கல்வி அட்மிஷன் சீசன் என்பதால் பெரியார் திடலுக்கு பெரியாரைப் பற்றி கொஞ்சம் மறந்துபோயிருக்கலாம், அது வேறு விஷயம்!


இந்நிலையில் பெரியார் தமிழர்களை எப்படி மதித்தார், தமிழறிஞர்களுக்கு என்ன மரியாதை கொடுத்தார் என்பது பற்றி இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


அதை தமிழ் லீடர் வாசகர்களுக்காக வைக்கிறோம். இதில் நம் கருத்து எதுவும் இல்லை... வெறும் களம்தான் நாம்.


இதோ அந்த சம்பவம்...


தமிழில் அகராதிகள் அதாவது டிக்ஷனரிகளுக்கு முன்பெல்லாம் ‘நிகண்டு’ என்றுதான் பெயர். இப்போது இருக்கக் கூடிய சொல் ரீதியாக பிரித்து பார்க்கக் கூடிய அகராதிகளுக்கு முந்திய காலத்தில் நிகண்டுகள் என்ற பாடல் தொகுப்பு மூலமாகத்தான் சொற்களின் அர்த்தம் அறியவேண்டும்.


இந்த நிகண்டு என்ற வடிவத்தில் சொற்களின் அர்த்தம் பிரித்துப் பார்ப்பது தமிழ் அறிவு அதிகம் உள்ளவர்களுக்கே சாத்தியம்.


இந்த நிலையில்தான் இந்த நிகண்டுகளுக்கு பதிலாக தமிழ் அகராதியை அதாவது இப்போது இருக்கக் கூடிய வடிவத்தை வடிவமைத்தார் தமிழறிஞரான கதிரைவேலனார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேரறிஞர். எனவே அந்த அகராதி யாழ்ப்பாண பேரகராதி என்று அழைக்கப்படுகிறது.


இவர் தன் வாழ்நாளில் ஒருமுறை தமிழகம் வந்திருந்தபோது...


தந்தை பெரியாரைப் பார்க்க விரும்பினார். அவ்வாறே வந்து சந்தித்தார்.


அவரை வரவேற்ற பெரியார்... யாழ்ப்பாண தமிழறிஞருக்கு பால் கொடுத்து உபசரித்திருக்கிறார். உபசரித்து முடித்த கையோடு... எதிலும் ஒளிவு மறைவு வைக்காத பெரியார் அப்போது தமிழ் பற்றியும் தமிழ் புலவர்கள் பற்றியும் தனது கருத்தை கதிரைவேலனாரிடம் கூறியிருக்கிறார்.


அதாவது,


‘என்னைப் பொறுத்தவரை புலவன் என்றால் பகுத்தறிவில்லாத புளுகன் என்றுதான் அர்த்தம். தமிழ் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்களைச்  சொல்லி மக்களைய மயக்கி காசு பார்க்கும் தொழில்தானய்யா புலவர் தொழில். இது ஒரு தொழிலா?


மனித சமுதாயத்துக்கு புலவர்களால் பத்து பைசா பிரயோசனம் உண்டா..? அதனால்தான் சொல்கிறேன்... நீங்களும் பகுத்தறிவே இல்லாத ஒரு புளுகன்தான்’


என்று கதிரைவேலனாரை கண் எதிரிலேயே வைத்துக் கொண்டு அவரை காய்ச்சி எடுத்துவிட்டார் பெரியார்.


பெரும் தமிழ் அகாரதியையே தொகுத்த கதிரைவேலனார் பெரியாரின் கருத்துக்களைக் கேட்டு அதிர்ந்துவிட்டார்.


தமிழின் நுட்பத்தையும், தமிழ் அறிஞர்களின் ஆற்றலையும் தொல்காப்பியத்திலிருந்து எடுத்து வைத்து வாதங்களை அடுக்கி பெரியாருக்கு அங்கேயே பதிலடி கொடுத்த கதிரவேலனார்... கடைசியில் ஒருகாரியம் செய்தார்.


அதாவது... ‘தமிழையும், தமிழர்களையும், தமிழ் அறிஞர்களையும் இகழ்ந்த உம் கையால் நான் குடித்த பால் கூட எனக்கு விஷமாகத்தான் போகும்’ என்று சொல்லி...


தன் விரலை வாய்க்குள் விட்டு நன்றாகக் குடைந்து குமட்டி பெரியார் கொடுத்த பாலை அங்கேயே வாந்தியாக எடுத்துத் துப்பிவிட்டு வெளியேறினார் கதிரைவேலனார்.


இது செவிவழிச் செய்தி அல்ல...


பெரியார் இதை தானே பொதுக்கூட்டத்திலும் சொல்லியிருக்கிறார். ‘மொழித் தொல்லை’ என்ற பெரியாரின் தொகுப்பு நூலிலும் பெரியாரின் விளக்கம் இடம்பெற்றுள்ளது.


அதில் பெரியார் சொல்கிறார்...


‘‘புலவர் என்றால் சொந்தப் புத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் நான் உரை கூறுவேன். நா. கதிரைவேற்பிள்ளை என்ற தமிழ் வாயாடிப் புலவர் ஒருவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழச்சியில் தமிழ் புலவர்களுக்கு பகுத்தறிவு  கிடையாது. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி என்னிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்துவிட்டார்’’


-என்று பெரியார் இதை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.


பேரறிஞர் கதிரைவேலனார் தமிழ் பற்றியும் தமிழறிஞர்கள் பற்றியும் பதிலடி கொடுத்ததற்கு பெரியார் கொடுத்த பட்டம்தான் ‘வாயாடிப் புலவர்’.


திராவிடத்துக்கும் தமிழியத்துக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த சம்பவத்தை மீண்டும் வாந்தி எடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா?

Post in: Society
Be the first person to like this